மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை, இந்தியாவில் உருவாக்குவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோ திரும்பப் பெற்றுக் கொண்டது. இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில், “எங்களின் தொழில்நுட்பத்தை உள்ளூர் விதை நிறுவனங்களோடு, பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. எங்களை கட்டாயப்படுத்தும் இந்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விண்ணப்பத்தைத் திரும்ப பெற்றிருக்கிறோம்” என தெரிவித்துள்ளது.
மான்சாண்டோ பின்வாங்கியதன் காரணம் குறித்து, விவசாய ஆர்வலர்களிடம் பேசினோம். இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ‘அறச்சலூர்’ செல்வம், “மான்சாண்டோ பருத்தி விதைகளை உருவாக்க அனுமதிகோரும் விண்ணப்பத்தை திரும்ப வாங்கியதில் சந்தோஷம்தான். ஆனால் முழுமையான சந்தோஷமே, மான்சாண்டோ ஐரோப்பாவிலிருந்து வெளியேறியது போல, இந்தியாவில் இருந்து முழுவதுமாக வெளியேற வேண்டும். மான்சாண்டோவிற்கு கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் மத்திய அரசு பறிக்க வேண்டும். இப்போது ஏற்பட்டிருக்கும் நிலை தற்காலிகமானதுதான்; நிரந்தரமானதல்ல. மரபணு மாற்றப்பயிர்களை விற்பனை செய்ய மான்சாண்டோ, இந்தியாவினை ஒரு வேட்டைக்காடாக பார்க்கிறது. இது பி.டி பருத்தி விஷயத்தில் பின்வாங்குவதுபோல பின் வாங்கிவிட்டு, மரபணுக் கடுகை கொண்டுவர அதிக வாய்ப்பு உண்டு. மான்சாண்டோவின் பி.டி. பருத்தி விதையால், விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணத்தை ஆராய மத்தியஅரசு எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அந்த பி.டி விதைகள் நல்லதா, கெட்டதா என எதுவும் யோசிக்கவில்லை. இப்போது மரபணுக்கடுகை பற்றி டெல்லி பல்கலைக்கழகத்தில் மறைமுக ஆராய்ச்சி நடக்கிறது. அதற்கு பின்னாலும் மரபணுமாற்ற விதை கம்பெனியே இருக்கிறது. பி.டி கடுகை மட்டுமல்லாமல், எந்தவொரு மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் இந்தியாவிற்குள் வர கூடாது. அப்படி வந்தால் இயற்கையும், நமது பாரம்பர்யமும் முற்றிலும் அழிந்து விடும்” என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய, பாதுகாப்புக்கான உணவுக்கூட்டமைப்பின் தலைவர் அனந்து, “மரபணுமாற்ற பி.டி பருத்திக்கான விண்ணப்பத்தை மான்சாண்டோ திரும்ப வாங்கியிருக்கிறது. ஆனால் இது சந்தோஷப்பட வேண்டிய நேரமில்லை. மான்சாண்டோ அடுத்து விற்பனை செய்ய இருக்கும் பி.டி பருத்திக்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தை மட்டுமே திரும்பப் பெற்றுள்ளது. ஒருபோதும் இந்தியாவை விட்டுப்போகாது. அவ்வளவு ஏன்? பிரேசில் அரசு அபராதம் விதித்தும் கூட, மான்சாண்டோ நிறுவனம் பிரேசிலை விட்டு வெளியேறவில்லை. இப்போது டெல்லி பல்கலைக்கழகம் மரபணுமாற்ற கடுகை அறிமுகம் செய்ய போகிறது. இந்த விதைக்கான உரிமையும் மரபணுமாற்ற விதை விற்கும் கம்பெனியிடம்தான் போகப்போகிறது. செம்மை நெல் சாகுபடி போன்றே கடுகினை நடவு செய்தால் ஒன்றரை மடங்கு லாபம் கிடைக்கும். பாரம்பர்யத்தில் நமக்கான அனைத்து வழிமுறைகளும் தெளிவாக உள்ளன. இப்போது மான்சாண்டோ அறிவித்திருப்பது வெறும் நாடகமே” என்றார்.
“விதைகள் எப்போதும் விவசாயிகள் கையில் இருக்க வேண்டும். கார்ப்பரேட் கைகளில் ஒருபோதும் இருக்க கூடாது” என்பதே விவசாய ஆர்வலர்களின் ஓங்கிய குரலாக இருகிறது.
-துரை.நாகராஜன்,
ANANDA VIKATAN
Monsanto has to be removed from India before it destroys our soil and species.