aseel-farmer-junctionநடமாடும் வங்கிகள்:

நாட்டுக்கோழிக்கு அதிக விலை கிடைக்கும் போது கிராம பெண்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் சிறப்பு கவனம் செலுத்தினால், நாட்டுக்கோழிகள் நடமாடும் வங்கிகளாக கை கொடுத்து உதவும். தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பவர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு ‘மாநில கோழி வளர்ப்பு திட்டம்’ என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பங்கேற்க விதிமுறைகள் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளன.

ஒரு நபர் 250 நாட்டுக்கோழிகளை வளர்க்க அரசு மானியம் வழங்குகிறது. 20 அடிக்கு 16 அடி என்ற அளவில் கோழிக்கொட்டகை அமைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் ரேஷன் கார்டு நகலினை இணைத்து அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் கொடுத்தால் அவர் அதனை பரிசீலனை செய்வார்.

தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை நாட்டுக்கோழி குஞ்சுகளை வாங்குவதற்கும், பின்னர் நோய் தடுப்பு தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. இயற்கையிலேயே நாட்டுக்கோழிக்கறியின் சதைப்பகுதியில் உள்ள திசுக்கள் ருசியாக இருக்கும்படி அமைந்துள்ளன. மேலும் கொல்லைப் புறங்களுக்கு சென்று குப்பையை கிளறியும் நிலக்கழிவுகளையும், புற்களுடன் சேர்த்து சாப்பிடுவதால் நாட்டுக்கோழிக்கறியைச் சமைக்கும் போது அதிக வாசனையை பரப்புகிறது. இந்த மணமும் ருசியுமே நாட்டுக்கோழிகள் அதிக விலைக்கு விற்பதற்கு காரணமாகிறது.

சைவ முட்டைகள் சேவல் இல்லாமல் கோழி முட்டை இடுமா? என்ற கேள்வியை கேட்டால் படித்தவர் முதல் பாமரர் வரை இடாது என்றே கூறுவர். கோழிகள் முட்டையிட சேவல்கள் தேவையில்லை. ஆனால் கோழிகள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்க சேவல்கள் அவசியம் தேவை. எனவே தான் பண்ணைகளில் சேவல் இல்லாமல் கோழிகள் இடும் முட்டை குஞ்சு பொரிக்காது. ஆகையால் இவற்றை சைவ முட்டையாகவும் கருதலாம்.

கோழி முட்டையை விதையாகவே கருதுகின்றனர். செடி கொடிகளின் விதைகள் இனச்சேர்க்கையில் உருவானவை. கோழி முட்டையிடுவது இனச்சேர்க்கையாலும் ஏற்படும். இனச்சேர்க்கை இல்லாலும் நிகழும். முட்டை என்பது ஒரு பெண் செல். விலங்கினங்களில் இப்பெண் செல் கண்ணுக்கு தெரியாது. ஆனால் பறவை இனங்களில் கண்ணால் பார்க்க கூடிய அளவுக்கு தெரிகிறது. ஆகவே சேவல் இருந்தாலும், சேவல் இல்லா விட்டாலும் கோழிகள் முட்டையிட்டு கொண்டு தான் இருக்கும்.

தொடர்புக்கு 94864 69044.

– டாக்டர் வி.ராஜேந்திரன்,
முன்னாள் இணை இயக்குனர்,
கால்நடை பராமரிப்புத்துறை, நத்தம்.

நன்றி : தினமலர்