மாண்சாண்டோவின் மரபணு மாற்று பி.டி பருத்தி விதைகளை வாங்க மறுத்து, பாரம்பரிய நாட்டு விதைகளுக்கு இந்திய விவசாயிகள் திரும்பி வருவதால், மாண்சாண்டோ நிறுவனம் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மாண்சாண்டோ நிறுவனம், பி.டி எனப்படும் மரபணு மாற்று விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் நுழைவதற்காக அந்த நிறுவனம் பல சட்ட விதிமுறைகளை மீறியதாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது. இருப்பினும் தனது பண, அதிகார பலத்தை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்தது.

மாண்சாண்டோ நிறுவனத்தின் இந்த விதிமீறல்கள் மற்றும் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை, பல இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக அமைந்தது. கடந்த 1995-ஆம் ஆண்டிலிருந்து 2013-ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலானோர் மாண்சாண்டேவின் மரபணு மாற்று விதைகளை பயன்படுத்தியவர்கள்.

அதிக விலை கொடுத்து தனது நிறுவனத்தின் விதைகளை வாங்கவும், பருத்திச் செடிகளை சிறப்பாக வளர்க்க விலை அதிகமுள்ள உரங்களை பயன்படுத்தவும் இந்திய விவசாயிகளை மாண்சாண்டோ நிறுவனம் வற்புறுத்தியது. ஆனால் பி.டி பருத்தி விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பருத்திச் செடிகளுக்கு , பூச்சித் தாக்குதலை எதிர்க்கும் திறன் குறைந்திருந்தது.

மாண்சாண்டோ நிறுவன பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியதால் ஏற்பட்ட நஷ்டத்தினால், இந்த விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்தார்கள். வாழ்வாதாரத்தை இழந்தார்கள். பல விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள்.

ஆனால் சமீபகாலமாக மரபணு மாற்ற விதைகளுக்கு மாற்றாக உள்ளூர் நாட்டு விதைகளை விவசாயிகளிடம் இந்திய அரசு பிரபலப்படுத்தி வருகிறது. பெரும்பாலான இந்திய விவசாயிகள் நாட்டு விதைகளுக்கு திரும்பி வருவதால், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டத்தை மாண்சாண்டோ நிறுவனம் சந்தித்துள்ளது.

”இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், பி.டி பருத்தி விதைகளை தவிர்த்து, பெரும்பாலான விவசாயிகள் நாட்டு பருத்தி விதைகளை பயன்படுத்த துவங்கிவிடுவார்கள்.” என இந்திய பருத்தி ஆராய்ச்சிக் கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மரபணு மாற்ற விதைகள் மிகவும் உயர் தரமானவை என்று மாண்சாண்டோ நிறுவனம் தெரிவித்து வருகிறது. ஆனால் சமீபத்தில் மேற்கு ஆப்ரிக்காவில் தனது மரபணு மாற்ற விதைகளை அறிமுகப்படுத்த மாண்சாண்டோ நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன. பி.டி பருத்தி விதைகள் தரமானவையாக இல்லை என அந்நாட்டு விவசாயிகள், மாண்சாண்டோ நிறுவன பொருட்களை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.