வண்ணக்கோழி வளர்ப்பு-Color Broilers
சிறிய இடம் இருந்தால் கூட அதில் ஒரு லாபகரமான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வண்ணக் கோழி (color broilers) வளர்ப்பு இத்தகைய ஒரு தொழில் வாய்ப்பு ஆகும். நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வண்ணக் கோழி இனங்கள் பார்ப்பதற்கு நாட்டுக் கோழி போன்றே காணப்படும். ஆனால் இவற்றுக்கு நாட்டுக் கோழிகளை விட பல சிறப்பான இயல்புகள் உண்டு. குறிப்பாக இந்த வகை கோழிகளுக்கு கரையான்களை உணவாக பயன்படுத்துவதன் மூலம் இவை எளிதில் அதிக புரதச்சத்தை பெற்று வேகமாக எடை அதிகரிக்கும். இந்த கோழிகளை புறக்கடையில் வளர்ப்பதன் மூலம் வீட்டில் உள்ள பெண்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், நிலமற்ற விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோர் பொருளாதார வளத்தை பெறலாம்.
சிறப்பு அம்சங்கள்
- வண்ணக் கோழி வளர்ப்பில் ஈடுபடும் முன்பு அவற்றின் சிறப்பம்சங்களை அறிந்து கொள்வது நல்லது.
- நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும்.
- நாட்டுக் கோழி இறைச்சியின் சுவையை விட அதிக சுவையுள்ளது.
- எல்லா இடங்களிலும், எல்லா தட்பவெப்ப நிலைகளையும் தாங்கி வளரக் கூடியது.
- அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
- அதி நவீன வளர்ப்பு முறைகளை பயன்படுத்தி வளர்க்க தேவையில்லை. சாதாரண நாட்டுக் கோழி போல் புறக்கடை வளர்ப்பாக வளர்க்க முடியும்.
- நாட்டுக் கோழிகளை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியும், அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது. இதன் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டைகளை போலவே பழுப்பு நிறம் கொண்டதால் நாட்டுக் கோழி முட்டைகளின் விலைக்கே விற்பனை செய்யலாம்.
கரையான் உணவு
கரையான்களில் 36 சதவிகிதம் புரதம், 44 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. இவை இரண்டும் கோழியின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் வளர்ச்சி விகிதம் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. இதனால் தீவனச் செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம். கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, இற்றுப்போன மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண்பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும்.
உற்பத்தி ஆவதில்லை
கரையான்களில் உற்பத்தியானது அடைமழைக் காலங்களில் மட்டும் பாதிக்கப்படுவதுண்டு. இது தவிர பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட இடங்களில் கரையான்கள் உற்பத்தி ஆவது இல்லை. இது தவிர, எறும்பு புற்று அதிகமாக உள்ள இடங்களிலும் கரையான்கள் உற்பத்தியாகாது. எனவே, கரையான்களை உற்பத்தி செய்ய முற்படும் போது இது போன்ற இடங்களை தவிர்க்க வேண்டும்.
தீவனங்கள்
வண்ணக் கோழிகளுக்கு கரையான்களை தவிர வழக்கமான தீவனங்களை அளித்து வளர்க்கலாம். கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு ஆகியவற்றை 30 முதல் 35 பங்கும், கடலைப் புண்ணாக்கு 15 பங்கும், தவிடு வகைகள் 15 பங்கும், சமையலறை கழிவுகள் 5 சதவிகிதமும், கரையான் 10 பங்கும், புளியங் கொட்டை 10 பங்கும், கருவாட்டு தூள் 5 பங்கு, தாதுப்பு 1 பங்கு மற்றும் வைட்டமின் கலவை 1 பங்கும் எடுத்து நன்றாக இவற்றை கலந்து கொண்டு கோழி தீவனம் தயாரிக்கலாம்.
இவை தவிர வேலிமசால், குதிரைமசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை 5 முதல் 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம். வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை உற்பத்தி செய்ய பெரிய அளவில் இடவசதி தேவையில்லை. ஒரு தடவை நட்டால் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து இவற்றை அறுவடை செய்து பசுந்தீவனம் தயாரிக்கலாம்.
நோய்கள் பராமரிப்பு
வண்ணக் கோழிகளை வளர்க்க முற்படும் போது அவற்றை நோய்களில் இருந்து பாதுகாக்க தகுந்த காலகட்டத்தில் தடுப்பூசிகளை அளிப்பது நல்லது. இந்த குஞ்சுகளுக்கு பிறந்த 6 வது நாள் லசோட்டா தடுப்பூசியும், 12 வது நாள் கம்போரா தடுப்பூசி, 27 ம் நாள் மீண்டும் லசோட்டா தடுப்பூசியும், இரண்டாவது மாதத்தில் இராணிகெட் தடுப்பூசியும், தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை இராணிகெட் கே தடுப்பூசி அளிக்க வேண்டும்.
ஒப்பீடு
வண்ணக் கோழிகளை நாட்டுக் கோழிகளுடன் ஒப்பிடும் போது வண்ணக் கோழியே பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கிறது. வண்ணக் கோழிகள் நாட்டுக் கோழிகளை விட வேகமாக உடல் எடை அதிகரிக்கிறது. அதாவது நாட்டுக் கோழிகள் 8 வார கால அளவில் 600 முதல் 800 கிராம் எடை அளவே உடலின் எடை கூடுகிறது. ஆனால் வண்ணக் கோழிகள் இதே 8 வாரங்களில் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 கிராம் எடையை அடைகிறது. அதே போல் நாட்டு கோழிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 70 முட்டைகள் வரை இடுகிறது.
ஆனால் வண்ணக் கோழிகள் 100 முதல் 120 முட்டைகளை இடுகிறது. மேலும் நாட்டுக் கோழி முட்டையின் எடை 45 முதல் 50 கிராம் அளவே இருக்கிறது. ஆனால் வண்ணக் கோழிகளின் முட்டையின் எடையானது 55 முதல் 65 கிராம் வரை இருக்கிறது. இது போல் பலவிதங்களில் ஒப்பீடு செய்து பார்த்த நிலையில் வண்ணக் கோழிகள் முதலிடத்தை பெறுகின்றன. எனவே, நாட்டுக் கோழி வளர்ப்பில் இறங்க விரும்புபவர்கள் பண்ணையின் ஒரு பகுதியாக வண்ணக் கோழிகளையும் சோதனை அடிப்படையில் வளர்த்து பின்னர் பெரிய அளவில் இதே கோழிகளை வளர்த்து லாபம் பெறலாம்.
ஆதாரம் : கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல். and vikaspedia
Leave A Comment
You must be logged in to post a comment.