சரியான மழை, சரியான தட்பவெப்பம், நல்ல மண்வளம் எல்லாம் இருந்தாலும்…
விதைக்கும் விதை சரியாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். இது ஆடிப்பட்டத்துக்கு மட்டுமல்ல, எல்லா பட்டத்துக்கும் பொருந்தும். மற்ற பொருட்களைப் போல விதைகளை முழுமையாக சோதனை செய்து பார்த்தெல்லாம் வாங்க முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாங்க முடியும். அந்த விதை பலன் தருமா என்பது பல மாதங்கள் கழித்துத்தான் தெரிய வரும். ஆனால், சான்றளிக்கப்பட்ட விதைகளை வாங்கும்போது பெரும்பாலும் இப்பிரச்னைகள் வருவதில்லை. அப்படி சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளை, நியாயமான விலையில் விற்றுவருகிறது, மத்திய வேளாண் துறையின்கீழ் இயங்கிவரும் தேசிய விதைக் கழகம் (National Seed Corporation). இங்கு விதைகள் ஆடிப்பட்டத்தில் மட்டுமல்ல ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன.
தேசிய விதைக் கழகம், 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நெல், உளுந்து, பச்சைப் பயறு, துவரை, நிலக்கடலை, காய்கறிகள், கீரைகள், கம்பு, சோளம், கேழ்வரகு… என அனைத்து வகையான விதைகளும் விதைக் கழகத்தின் மூலம் விற்பனை செயயப்படுகிறது. இக்கழகத்தின் மண்டல அலுவலகம் சென்னையில் உள்ளது. மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஊட்டி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய இடங்களில் பகுதி அளவிலான மையங்கள் செயல்படுகின்றன. உள்ளூர் தேவைக்குப் போக… மீதி விதைகள் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. அதேபோல வெளி மாநிலங்களிலிருந்தும் விதைகள் வரவழைக்கப்படுகின்றன. கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற விதைகளையும் விற்பனை செய்து வருகிறது, இக்கழகம்.வேளாண் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து வெளியிடப்படும் உயர் விளைச்சல் ரகங்கள் மட்டுமே இங்கு கிடைக்கும்.
தேசிய விதைக் கழகம் சான்றளிக்கப்பட்ட விதைகளை மட்டுமே விற்பனை செய்கிறது. விதைப் பையிலேயே முளைப்புத்திறன், ஈரப்பதம், காலாவதியாகும் தேதி போன்ற விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும். சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை, ஆய்வு செய்த தேதியிலிருந்து
9 மாதங்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். வெளிச்சந்தையைவிட தேசிய விதைக் கழகத்தில் விதையின் விலை மிக மிகக் குறைவாக இருக்கும். வெளிமாநில விதைகளை அதிகளவில் கேட்பவர்களுக்கு விதைக்கழகமே தருவித்துக் கொடுக்கிறது. குறைந்த அளவு விதைகள் மட்டுமே தேவைப்படுபவர்களுக்கு தபால் மூலம் வாங்குவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுப்பார்கள், விதைக்கழக அலுவலர்கள்.
தேசிய விதைக் கழகமே உற்பத்தி செய்வதோடு, விவசாயிகளிடமிருந்து உற்பத்தி செய்தும் வாங்கிக் கொள்கிறது. விதைகளை உற்பத்தி செய்து கொடுக்க விரும்பும் விவசாயிகள், தலைமை அலுவலகத்திலோ… பகுதி அலுவலகங்களிலோ பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். தரமான விதைகளை உற்பத்தி செய்ய ஆலோசனைகளையும் கிடைக்கும். சிறு, குறு விவசாயிகளும் குழுவாக இணைந்து ‘சான்று விதை உற்பத்தி’யில் பங்கேற்க முடியும். விவசாயிகள் உற்பத்தி செய்து தரும் விதைநெல்லுக்கு சந்தை விலையைவிட 25 % கூடுதல் விலை மற்றும் ஊக்கத்தொகை கிடைக்கும். எண்ணெய்வித்துக்கள், பயறு வகைகளை உற்பத்தி செய்பவர்களுக்கு சந்தை விலையைவிட கிலோவுக்கு 10 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும். நெல் விதைகள் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், பயறு வகைகள் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் கொள்முதல் செய்யப்படுகினறன.
தேசிய விதைக் கழகத்தின் மண்டல மற்றும் பகுதி அலுவலகங்களின் முகவரிகள்:
மண்டல மேலாளர்,
22-சி, சிட்கோ (வடக்கு) இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
தொலைதொடர்பு இணைப்பகம் அருகில்,
அம்பத்தூர், சென்னை-600098,
தொலைபேசி: 044-26242363 / 26256192.
பகுதி அலுவலக மேலாளர்,
பி-1, பி-2, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
கப்பலூர், மதுரை-625006,
தொலைபேசி: 0452-2482878.
பகுதி அலுவலக மேலாளர்,
16/1, வில்லியம்ஸ் சாலை,
கண்டோன்மென்ட், திருச்சி-620001,
தொலைபேசி: 0431-2460080.
பகுதி அலுவலக மேலாளர்,
56-இ, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
எல்-ஜி எக்யூப்மெண்ட்ஸ் எதிரில்,
குறிச்சி, கோயம்புத்தூர்-641021,
தொலைபேசி: 0422-2673415.
பொறுப்பாளர் (விற்பனைப் பிரிவு),
சாரிங் கிராஸ், ஊட்டி-643001,
தொலைபேசி: 0423-2440092.
பயிர்வாரி முறைக்கு சட்டம் இயற்ற வேண்டும்!
ஆடிப்பட்டத்தில் புஞ்சை நிலங்களில் பயிர் செய்யப்படும் பயிர்களின் தேவை குறித்து, ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சி.வையாபுரி பேசியபோது, “பருப்பு விலை கிலோ ஒன்றுக்கு 150லிருந்து 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த விலையேற்றம் நீடித்து வருகிறது.
நிலங்களில் நஞ்சை, புஞ்சை, தோட்டக்கலைப் பயிர்கள் என்று பயிர் செய்து வந்தோம். நிலத்துக்கு ஏற்ற பயிர்களை வைக்க வேண்டும் (Agro climatic Zonal Wise Crop Pattern) என்பது அடிப்படை விதி. இதை முன்வைத்து புதிய விதி ஓன்றைக் கட்டாயம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் புஞ்சைப் பயிர்களான சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களைப் பாதுகாக்க முடியும்.
புஞ்சை நிலங்களில் இறவை சாகுபடி மேற்கொண்டதால்தான் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, நிலத்தடி நீரை எந்த வரம்பும் இல்லாமல் எடுத்துப் பயன்படுத்துகிறோம். இதற்கு அரசு சார்பில் எந்தவித வழிகாட்டுதல்களும் இல்லை.
ஆழ்துளைக் கிணறுகளால் இயன்ற மட்டும் நீரை உறிஞ்சுகின்றோம். இதனால் விவசாயக் கிணறுகள் நீரற்ற பாழடைந்த கிணறுகளாக மாறி வருகின்றன. தமிழக ஆறுகளில் சட்டவிரோதமாய் மின்சார பம்புசெட்டுகளை வைத்து, தண்ணீர் உறிஞ்சப்படுகின்றன. தண்ணீர்ப் பற்றாக்குறை மலைஉச்சியிலிருந்து கடற்கரை வரையில் நிலவுகிறது. மழை வரும்; வராமல் போகலாம். ஆனால், நிலத்தடி நீரை குறையாதிருக்குமாறு கண்காணிக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கவேண்டும். இதற்குத்தான் எந்த நிலத்தில் எந்தப் பயிரை செய்ய வேண்டும் என்பது குறித்தான பயிர்வாரி முறை சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த சட்டத்தின் மூலம் நாட்டின் அனைத்து ஆற்றுப்படுகைகளையும், நீர்நிலைகளையும் பாதுகாக்கலாம். தண்ணீரையும் சேமிக்கலாம். அனைத்துவிதமான பயிர்களையும் சாகுபடி செய்யலாம்” என்றார்.
பாரம்பர்ய விதைகள்!
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, சாரதா ஆசிரமம் பாரம்பர்ய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 175 பாரம்பர்ய நெல் ரகங்கள் இங்குள்ளன. விவசாயிகளின் மண் வளத்துக்கேற்ப விதைகள் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளைப்பொன்னி, சிகப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா, சீரகச்சம்பா, கந்தசாலா, பனங்காட்டுக் குடவாழை, சன்னச் சம்பா, காலா நமக், ஜவ்வாதுமலை நெல் உள்ளிட்ட அரியவகை பாரம்பர்ய நெல் வகைகள் சிறப்பு பெற்றவை. விவசாயிகளுக்கு கிலோ 40 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்புக்கு,
சாரதா ஆஸ்ரமம், விவேகானந்தா நகர்,
புதிய எடைக்கல், உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம்.
செல்போன்: 99430-64596
Source: Pasumai Vikatan
Leave A Comment
You must be logged in to post a comment.