கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
பசுந்தீவனம்
மழைக்காலங்களில், பசுந்தீவனம் மிகுதியாக கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தி திறன் குறைவாக காணப்படும். மழையில் நனைந்த பசுந்தீவனத்தை உண்பதற்கு கால்நடைகள் தயங்கும். இதனால் கால்நடைகளுக்கு, மழைக்காலத்தில் உணவு தயாரிப்பு பற்றியும், அதனை அளிக்கும் முறை, சேமிப்பு திறன் போன்றவற்றில் கையாள வேண்டிய உத்திகளை பற்றியும், கால்நடை வளர்ப்போர் அறிந்து கடைபிடிப்பது அவசியம்.
பசுந்தீவனம் மழைக்காலத்தில் மிகுதியாக கிடைக்கும். கால்நடைகள் அதிகம் மழை பெய்த புல்லை உண்பதால் கழிச்சல், செரிமான கோளாறு, புழுக்கள் தாக்கத்தினால் அவதிப்படும். மழைக்காலத்தில் அறுவடை செய்த புல்லை சற்று நேரம் உலர வைத்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.
கால்நடை வளர்ப்பு
- கால்நடை வளர்ப்பில் 2 முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று கால்நடைகளை மேய்ச்சலுக்கு மட்டும் அனுப்பி வளர்ப்பது. மற்றொன்று பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு அளித்து வளர்ப்பதாகும். மேய்ச்சல் மட்டும் உடைய கால்நடை வளர்ப்பு முறை தமிழகத்தில் அதிக அளவில் பின்பற்றப்படுகிறது. பசுந்தீவனம் உற்பத்தி செய்து அதனை அளிப்பது அடுத்த வகையாகும்.
- மேய்ச்சல் முறையில் உள்ள கால்நடைகள் மழைக்காலத்தில் அதிக புல்லை உட்கொள்வதால் கழிச்சல் நோய் உண்டாகும்.
- நீண்ட வறட்சிக்கு பின் மழையில் முளைத்த புற்களை உண்பதால் வயிறு உப்புசம், செரிமான கோளாறு உண்டாகும். எனவே மழைக்காலத்தில் கால்நடைகளை அதிகாலை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்ப்பது நல்லது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கால்நடைகளை மேய்க்க வேண்டும்.
தீவனம் அளித்தல்
- பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து, அறுவடை செய்து, அதை வெயிலில் உலர வைத்து, பின் அளிக்க வேண்டும். இதை கால்நடைகள் விரும்பி உண்ணும். மழைக்காலங்களில் கால்நடைகளின் உடலில் தட்பவெப்பம் குறைவாக காணப்படும். ஏனென்றால் வெயில் காலத்தில் நடக்கும் உடல் செயல்பாட்டு தன்மை, மழைக்காலத்தில் முற்றிலும் மாறுபடுகிறது. எனவே பால் உற்பத்தி மற்றும் இறைச்சி உற்பத்திக்கு ஏற்ப அடர் தீவனத்தை அதிகம் அளிக்க வேண்டும்.
- உதாரணத்திற்கு ஒரு லிட்டர் பால் உற்பத்திற்கு 500 கிராம் அடர் தீவனமும், 50 கிராம் ஆடுகளின் இறைச்சி உற்பத்திக்கு தினசரி 100 – 150 கிராம் அடர்தீவனமும் அளிக்க வேண்டும். எனவே, மழைக்காலத்தில் அடர்தீவனம் கண்டிப்பாக உற்பத்திக்கு ஏற்ப அளிப்பது அவசியம். 2 வேளைகளாக பிரித்து அடர்தீவனம் அளிப்பது முக்கியம். அதிகாலை மற்றும் இரவு நேரம் தீவனமளித்தலை தவிர்த்து, பகலில் அளிப்பதால், உற்பத்தி திறன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சேமிப்பு முறைகள்
மழைக்காலங்களில் அதிகமாக விளையும் பசுந்தீவனத்தை, பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனமாக மாற்றலாம். பின் வைக்கோல் அல்லது சோள தீவனத்தட்டையை, யூரியா சத்தூட்டிய வைக்கோலாக மாற்றினால், அதன் சத்துகள் அதிகரித்து, தீவனச்செலவு குறையும்.
அடர் தீவனமாக மக்காசோளம், கம்பு, புண்ணாக்கு மற்றும் தவிடு வகைகளை, ஈரம் படாமல் சேமிக்க வேண்டும். தீவன மூட்டைகளை மரக்கட்டைகளில் அடுக்கி வைத்தல் வேண்டும். சுவற்றை ஒட்டி தீவன மூட்டைகளை வைக்கக்கூடாது. தீவன அறைக்குள் காற்று புகாமல் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் அடர்தீவன தயாரிப்பை, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் செய்தல் நல்லது. தானிய வகைகளான மக்காச்சோளம், கம்பு போன்றவை மற்றும் கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு ஆகியவற்றை நன்கு காயவைத்து பின் அரைத்து சேமிக்க வேண்டும்.
பூச்சி மருந்து தெளித்தல்
கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் சுகாதாரமான தீவனம் அளிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீவன தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீவன தொட்டிகளில் மீதமாகும் தீவனத்தை கால்நடைகள் உண்ணவில்லை என்றால், உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். பசுந்தீவனத்தை மழைக்காலத்தில் ஈரம் இல்லாதவாறு உலர்த்தி அளித்தல் வேண்டும்.
பசுந்தீவனத்தை நன்கு உதிர்த்து மண் மற்றும் புழுக்கள், பூச்சிகள் இல்லாதவாறு அளிக்க வேண்டும். மழைக்காலங்களில் கொசுக்கள், உண்ணிகள் மற்றும் புழுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. எனவே தீவனத்தொட்டியை சுற்றியும், கொட்டகையை சுற்றியும், பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தல் மிகவும் அவசியம். தண்ணீர் தொட்டியை வாரம் ஒரு முறை சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடித்தல் வேண்டும். முக்கியமாக பாசி பிடித்தலை தவிர்க்க வேண்டும். இவற்றை கால்நடை வளர்ப்போர் கடைபிடிக்க வேண்டும்.
கேள்வி பதில்
1. கால்நடைகளுக்கு ஏற்ற பசுந்தீவனங்கள் எவை?
தானிய வகை : தீவனசோளம், கோ-27, கோ-10, கம்பு, நேப்பியர் ஓட்டுப்புல் கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கினியாபுல், கர்னால் புல், எருமைபுல் மற்றும் கொழுகட்டைப்புல் போன்றவை.
பயறுவகை : குதிரைமசால், கொள்ளு, தட்டைப்பயிறு, முயல் மாசல், வேலி மாசல், கலப்பகேனிம், போன்றவை
2. கால்நடைகளுக்கு ஏற்ற தீவன மரங்கள் எவை?
வ.எண் | பொது பெயர்கள் | வழக்க பெயர்கள் |
1 | சுபாபுல் | சவுண்டல் |
2 | குடைவேல் | குடவேல் |
3 | சிரிஸ் | குடவேல் |
4 | செஸ்பேனியா | வாகை |
5 | ஆலம் | அகத்தி |
6 | அரசமரம் | ஆலமரம் |
7 | வேப்பமரம் | அரசமரம் வேம்பு |
3. பண்ணையாளர்கள் தீவன விதைகள் மற்றும் தீவன புல் கரனைகளை எங்கு பெற முடியும்?
- கால்நடை அறிவியலுக்கான முதுநிலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்
- மாநில விதைப்பண்ணை, படப்பை
- மண்டல தீவன ஆராய்ச்சி மற்றும் செயல்முறை மையம், அலமாதி, திருவள்ளூர் மாவட்டம்
- தாவர மரபியல் மற்றும் இனவிருத்தி துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
- வேளாண் தகவல் தொழில்நுட்ப தகவல் மையம், காட்டுப்பாக்கம்
4. கலப்பின நேப்பியர் ஒட்டின புல் வகைகள் எவை?
கோ-1, கோ-2 மற்றும் கோ-3 போன்ற புல் வகைகளாகும்.
5. வறட்சி பகுதிகளுக்கு ஏற்ற தீவன மரங்கள் எவை?
விவசாயத்திற்கு ஏற்ற தரிசு நிலங்கள் : சுபாபுல், அகத்தி, சித்தகத்தி
பாறைகளுடன் கூடிய தரிசு நிலங்கள் : வாகை, அச்சாமரம், வேம்பு
காரதன்மைமிக்க தரிசு நிலம் : கருவேலம், சித்தகத்தி
ஆதாரம் : கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.
Leave A Comment
You must be logged in to post a comment.