1. விவசாய கடன்
  2. பயிர்க்கடன் பெற தகுதி?
  3. கடன் பெறுவது எப்படி?
  4. எவ்வளவு கடன் கிடைக்கும்?
  5. விளிம்பு தொகை
  6. வட்டி எவ்வளவு?
  7. திரும்ப செலுத்தும் முறை

விவசாய கடன்

இந்தியாவின் முதுகெழும்பு விவசாயத்தில் தான் இருக்கிறது என்பர். பல்வேறு வகையான தொழில்களுக்கு தேவைப்படுவது போலவே வேளாண்மை தொழிலுக்கும் மூலதனம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. விவாசயிகள் தங்கள் கடன் தேவைகளை பல வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றனர். முதன்முதலாக விவசாயிகளுக்கு வங்கி கடன் என்பது கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலம் தான் சாகுபடி செலவுகளுக்கு பணமும், இடு பொருள்கள் உரம் பூச்சி மருந்து முதலியவை வழங்கப்பட்டது. நீண்ட கால கடன் கூட்டுறவு நிலவள வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது. விவசாயிகள் தனியாரிடமும், கமிஷன் மண்டி, கந்து வட்டிக்காரர்களிடமும், உரக்கடைக்காரர்களிடமும் கடன் பெற்று சாகுபடி செய்வதுண்டு.

ஆனால் வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்ட பின்பு கிராமங்கள் பலவற்றில் வங்கி கிளைகள் திறக்கப்பட்டன. அங்கு கிராம மேம்பாட்டிற்கும், குறிப்பாக வேளாண்மைக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன. வங்கிகளில் தனியார் வங்கிகள், கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு நிலவள வங்கிகள், கிராமிய வளர்ச்சி வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், வெளிநாட்டு வர்த்தக வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் என்று பல வகைகள் உள்ளன. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி வங்கிகள் கொடுக்கும் மொத்த கடன் அளவில் கட்டாயமாக 18 சதவீதம் வேளாண்மை அபிவிருத்திக்கும், 40 சதவீதம் முன்னுரிமை கடனாகவும் வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து கண்காணித்து வருகிறது.

வங்கி கடன்களால் உள்ள நன்மை என்னவென்றால், குறைந்த வட்டி, எளிய தவணை, உடனடி சேவை என்பது தான். கடன்களில் பலவகைகள் உண்டு. இதில் குறுகிய கால கடனில் பயிர் சாகுபடி கடன்கள், உழவர் கடன் அட்டை திட்டம், விவசாய நகைக்கடன்கள், மகசூல் விற்பனைக்கடன் என்று பிரிவுகள் இருக்கின்றன. குறுகிய கால பயிர்களான நெல்,கரும்பு,வாழை, சோளம்,ராகி, உளுந்து, பயறு, மிளகாய், எள்,சூரியகாந்தி, பருத்தி, மஞ்சள், சோயா, வெங்காயம், புகையிலை, காய்கறிகள், வெற்றிலை மற்றும் இதர பயிர்களுக்கு பருவம் மற்றும் பட்டம் வாரியாக பயிர்க்கடன்கள் வழங்கப்படுகிறது. தென்னை, மா போன்ற தோப்புகள் பராமரிக்கவும் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகிறது. பட்டம் தவறினால் நட்டம். எனவே விவசாயிகள் வாழ்வில் பயிர்க்கடன் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதனை உணர்ந்து விதை, உரம், பூச்சி மருந்து, களைக்கொல்லி, நுண்ணூட்ட சத்து போன்ற இடுபொருட்கள் வாங்கவும்,நீர் மேலாண்மை, உழவு, களை எடுத்தல், எலி ஒழிப்பு, பூச்சி, பூஞ்சாண மருந்து தெளித்தல், அறுவடை போன்ற வேலைகளுக்கு கூலி கொடுக்கவும் தேவைப்படும் தொகையை கடனாக வழங்கப்படுகிறது.

பயிர்க்கடன் பெற தகுதி

சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் உள்ளவர்கள் பயிர்க்கடன் பெற தகுதியானவர்கள். நில உரிமையாளர்களிடம் செய்து கொண்டுள்ள குத்தகை ஒப்பந்தத்தை காட்டி கடன் பெறலாம். பயிர்க்கடன் விண்ணப்பம் செய்பவர்கள் வேறு எந்த நிறுவனத்திடமும் இதே தேவைகளுக்காக கடன் வாங்கியிருக்க கூடாது. மேலும் அப்படி கடன் வாங்கி கட்டாமலும், தவணை தவறிய நிலுவையில் உள்ளவராகவும் இருக்க கூடாது.

கடன் பெறுவது எப்படி?

பயிர்க்கடன் விண்ணப்ப படிவம் வங்கியிலேயே கிடைக்கும். நில சம்பந்தமான முழு விபரங்கள் அடங்கிய சிட்டா,அடங்கள், கிஸ்து, ரசீது, கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் முதலியவற்றை வங்கியில் கொடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், இதர வணிக வங்கிகளிலும் கடன் நிலுவையில் இல்லை என்பதற்கான சான்றிதழ் தேவைப்படும். ஒப்பந்த கரும்பு சாகுபடி செய்பவர்கள் சர்க்கரை ஆலையில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் கடன் பெறும் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் அல்லது புதிதாக கணக்கு தொடங்க வேண்டும்.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

ஒவ்வொரு பயிருக்கும் ஆண்டு தோறும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கடன் அளவு ஏக்கருக்கு எவ்வளவு என்பது மாவட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரையின் பேரில் தீர்மானிக்கப்படுகிறது. இதில் பாதி பொருளாகவும், பாதியை பணமாகவும் பெறலாம். எத்தனை ஏக்கர், என்ன பயிர் என்பதை கொண்டு கடன் அளவு நிர்ணயிக்கப்படும்.

விளிம்பு தொகை

மத்திய ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி 50 ஆயிரம் வரையிலான விவசாய கடன்களுக்கு விளிம்பு தொகை கிடையாது. கடன் தொகை 50 ஆயிரத்திற்கு மேல் அதிகமானால் 15 முதல் 25 விழுக்காடுகள் வரை விளிம்பு தொகையாக நிர்ணயிக்கப்படும்.

வட்டி எவ்வளவு?

தற்போதுள்ள நிலவரப்படி, 3 லட்சம் வரை 7 சதவீத வட்டி விதிக்கப்படுகிறது. இதற்கு மேல் உள்ள கடனுக்கு மாறுதலுக்கு உள்ளாகும். மத்திய அரசு, மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு ஏற்ப இது மாறுபடும். குறுகிய கால கடன் 3 லட்சம் வரை பெற்று அறுவடை காலம் 6 மாதம் முடிந்தும் கடன் தொகையை கட்டாவிட்டால் 50 ஆயிரம் வரை 10 சதவீதமும், 50 ஆயிரத்திற்கு மேல் 3 லட்சம் வரை 11 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும். 3 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை 11.75 சதவீதம் வசூலிக்கப்படும்.

திரும்ப செலுத்தும் முறை

எந்த பயிர் சாகுபடிக்காக கடன் வழங்கப்படுகிறதோ அதன் அறுவடைக்காலம் முடிந்து இரண்டு மாதத்திற்குள் வட்டியும், அசலும் சேர்த்து கட்டி முடிக்க வேண்டும். அறுவடை மகசூலை விற்று பணமாக்குவதற்காக இரண்டு மாத கால அவகாசம் தரப்படுகிறது. பயிர்கடன் இரண்டு பருவம், இரண்டு அறுவடைக்கு பின் என்ற ரீதியில் திருப்பி செலுத்த வேண்டும்.

கரும்பு ஆலையில் ஒப்பந்த சாகுபடிதாரர்கள், கரும்பு அறுவடைக்கு பின் ஆலையில் இருந்து வங்கிகளுக்கு நேரிடையாக சம்பந்தப்பட்ட விவசாயியின் கணக்கிற்கு பணம் வந்து விடும். கடன் தொகை வட்டி போக, மீதமுள்ள தொகை விவசாயியின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். வங்கிகளில் கடன் பெறுவதன் மூலம் குறைந்த வட்டி, எளிய தவணை, உன்னத சேவை என்ற நிலையை விவசாயிகள் பெற முடியும்.

ஆதாரம் : சிவ.மகாலிங்கம், பொதுமேலாளர், இந்தியன்ஓவர்சீஸ் வங்கி.