சிப்பி காளான் உற்பத்தி (Mushroom)

பருவம் மற்றும் இரகங்கள்

 • வருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம்
 • காளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம்.
 • வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை

காளான் குடில்

 • 16 சதுர மீட்டர் பரப்பு கொண்ட கூரை மேயப்பட்ட குடில் போதுமானதாகும். குடிலை, வித்துப் பரவும் அறையாகவும், காளான் வளர்ப்பு அறையாகவும் பிரிக்கவும்.
 • வித்து பரவும் அறை :25-300சி வெப்பநிலை, நல்ல காற்றோட்டம், இருட்டு இல்லாமல் இருக்க வேண்டும்.
 • வளர்ப்பு அறை :23-250சி வெப்பம், 75-80% ஈரப்பதம், மிதமான வெளிச்சம், நல்ல காற்றோட்டம் தேவை.

(தெர்மாமீட்டர், ஈரப்பத மீட்டர் போன்றவை எலக்ட்ரிக் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும்).

காளான் வித்து

 • ஏற்ற தானியங்கள் :சோளம் / மக்காச்சோளம் / கோதுமை
 • வித்து தயார் செய்தல் : தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து, காற்றில் உலர்த்தி, 2% சுண்ணாம்புடன் கலந்து, காலியான குளுக்கோஸ் பாட்டில்களில் இடவேண்டும். பின்பு தண்ணீர் உறிஞ்சாப் பஞ்சினால் அடைத்து நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.
 • வேளாண் பல்கலைக் கழகமோ, வேளாண் துறையோ உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும். பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

காளான் படுக்கை அமைத்தல்

 • ஏற்ற பொருட்கள்: வைக்கோல்/ கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது
 • மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி, 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி, 65% ஈரப்பதம் வரை காற்றில் உலர்த்திய (கைகளால் வைக்கோலைப் பிழிந்தால் தண்ணீர் சொட்டாமல் இருக்கும் வரை) வைக்கோலை பயன்படுத்த வேண்டும்.

காளான் பைகள் / படுக்கைகள் தயார் செய்தல்

 • காளான் படுக்கைகள் தயார் செய்ய 60 X 30 செ.மீ பாலீத்தின் பைகளை உபயோகிக்க வேண்டும் (உபயோகபபடுத்தும் பைகள் இரு பக்கமும் திறந்திருக்க வேண்டும்).
 • பாலித்தீன் பையை ஒரு பக்கத்தில் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவிற்கு நடுவில் 2 ஓட்டை போடவும்.
 • வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட வட்ட வடிவப் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும்.
 • இதே போல் 25 செ.மீ வைக்கோல் தளத்தை அமைக்கவும். காளான் வித்து தளத்தையும் வைக்கோல் தளத்தையும் 4 அல்லது 5 அடுக்குள் மாறி மாறி நிரப்ப வேண்டும். வாயிலை நன்றாகக் கட்டி, குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் வைக்க வேண்டும்.
 • விதைத்த 15-20 நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருக்கும். பின்னர் சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.
 • காளான் படுக்கை காயாமல் இருக்க தினமும் தண்ணீரைக் கைதெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

அறுவடை

 • பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும். 3 நாட்களில் முழுவளர்ச்சி அடையும்.
 • தண்ணீர் தெளிக்கும் முன் காளான் அறுவடை செய்ய வேண்டும். அறுவடையை தினமுமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ செய்யலாம்.
 • முதல் அறுவடைக்குப் பின் காளான் படுக்கையை ஒரு தகடு கொண்டு லேசாகச் சுரண்டி விட்டு, பின்பு தண்ணீர் தெளித்து வந்தால் இரண்டாம், மூன்றாம் அறுவடை செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களையோ அல்லது வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையங்களையோ அணுகவும்.

Source:vikaspedia