Nammalvar
தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த நம்மாழ்வார் இளங்காட்டில் 1938ல் ஏபரல் 6 பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்தபின் தந்தை மற்றும் சகோதர்களின் அறிவுரைப்படி விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண்மை படிப்பை தேர்ந்தெடுத்தார்.
தந்தையின் வைணவப் பிடிமானத்தால் நம்மாழ்வார் எனப் பெயர் சூட்டப்பட்டது. இருப்பினும் அன்றையக் காலக்கட்டதில் இளைஞர்களை ஈர்த்த சுயமரியாதை மற்றும் கடவுள் மறுப்பு கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சகோதர்களின் தாக்கத்தால் இவரும் கடவுள் மறுப்பாளராகவே இறுதி வரை வாழ்ந்தார், காவி உடை உடுத்திருப்பினும்.
அண்ணாமலைப் பல்கலையில் வேளாண்மைப் படிப்பு முடிந்தவுடன் 1963ல் கோவில்பட்டி மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு மையத்தின் மேலாளர் பணி. பணியின் போது ஆய்வு மையத்தில் நடக்கும் ஆய்வுகள் விவசாயிகளுக்குப் பயன் அளிப்பதாக இல்லை, என்னென்ன வகையான ஆய்வு, எதற்காக அந்த ஆய்வு போன்ற அணைத்தும் தில்லியில் முடிவு செய்யப்பட்டு கீழே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவை விவசாயிகளின் தேவைகளை ஒட்டி இல்லை, இங்கே இனியும் இருப்பது வீண் என்று கருதி பணியில் இருந்து 1969ல் விலகுகிறார். பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டோமினிக் பியர் என்பவர் ஆரம்பித்த Island of Peace என்ற தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து அதன் மூலம் களக்காடு பகுதியில் அடித்தட்டு ஏழை விவசாயிகளுக்கு நவின விவசாய முறைகளில் விவசாயம் செய்யவது, கூட்டுறவுக் கடன்கள் மூலம் கிணறுகள் அமைத்து அவர்களின் வாழ்வை உயர்த்துவது என்று இயங்கினார்.
ஆனால் பத்தாண்டுகள் முடிவில் விவசாயிகள் அதிக கடன் சுமையில் வீழ்ந்த தையும், நவூன விவசாயம் உத்திரவாதப்படுத்திய மேம்பட்ட வாழ்க்கை பொய்யுரையாக இருப்பதையும் அறிந்த அவர் அங்கிருந்து விலகுகிறார். இந்தக் காலக்கட்டத்தில் தான் அவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த பல ஆளுமைகளுடன் தொடர்பு ஏற்படுகிறது. தோழர் நல்லகண்ணு, வானமாமலை போன்றவர்களும், தி.ரா.ஜ போன்றவர்களும் நண்பர்கள் ஆகிறார்கள். இவர்களுடனான நட்பு அவரின் ஆளுமையை சிறப்பாக்குகிறது.
விவசாயிகளை மேம்படுத்த என்ற நோக்கில் படித்த நவீன விவசாயம் விவசாயிகளை அழிக்கிறது என்பது புரிந்தது ஆனால் ஏன் என்பது, எப்படி என்பதும், மீள வழி என்பதும் தெரியாத குழப்பம் மிகுந்த நிலையில் தொண்டு நிறுவன நண்பர்களுடன் தர்மபுரியில் உள்ள அஞ்சட்டி மலைப்பகுதியில் மேட்டூர் அணைத் திட்டத்தால் இடம் பெயர்த்து குடி அமர்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக பணிகளைத் துவக்குகிறார். இங்கு தான் அவர் களக்காடு. பகுதியில் இரசாயன விவசாயம் ஏன் விவசாயிகளுக்கு உதவவில்லை என்பதை அங்கிருந்த சிறுமியின் விடுகதையில் புரிந்து கொண்டார். அந்த விடுகதை தான் ‘காயாகிப் பூவாவது எது? பழமாகிக் காயாவது எது?’ விவசாயத்தின் பொருளாதாரத்தை கண்டறிய உதவிய மற்றொரு விடுகதை ‘;அடி காட்டுல நடு மாட்டுல நுனி வீட்டுல’
பிரச்சனையின் மூலம் தெரிந்தது ஆனால் அதிலிருந்து விடுதலையாவதற்கான வழி அறியாமல் இருந்தது. அந்தப் பகுதி மக்களிடம் பணி புரிந்த போது தான் அவர் மக்கள் தங்களின் சுய அறிவைப் பயன்படுத்த வேண்டுமெனில் அவர்களுக்குப் பிரச்சனையைப் புரிய வைத்துவிட்டு அவர்களுடன் சமமாக இருந்து வழிகளைக் காண உதவ வேண்டும் என்பதையும், எந்த மக்களுடன் பணிகள் செய்கிறோமோ அந்த மக்களுக்கு அவர்களை விட சிறிதேனும் அறிவிலோ, விவரங்களிலோ நம்மாழ்வார் உயர்ந்தவர் என்ற உணர்வு வரக்கூடாது. அப்படி வந்து விட்டால் அவர்கள் தங்களின் அளிவைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு நாம் செய்வோம் என்று இருப்பார்கள் என்பதையும் கற்றுக் கொண்டார். இந்தக் காலக்கட்டத்தில் தான் அவர் மசானபு புகோஃகா வின் ஒரு வைக்கோல் புரட்சி நூலைப் படிக்கிறார். அதிலிருந்து நவீன விவசாயத்தின் பாதிப்புகளில் இருந்து விவசாயிகள் மீண்டு வருவதற்கான வழிகள் இருப்பதை அறிந்து கொள்கிறார். அதை அப்படியே காப்பியடிக்காமல் நம் இலக்கியங்களில் இருந்து நம் வேளாண் மரபுகள், அதற்குள் புதைந்திருக்கும் வேளாண் அறிவியல், அனுபவங்கள் கொண்டு புத்தாக்கம் செய்து நம் வேளாண் மரபு அறிவியல் பூர்வமான விவசாயத்தைக் கடைபிடித்திருப்பதை விவசாயிகளுக்கு அவர்கள் மொழியில் உணர்த்துகிறார்.
இந்தக் காலக்கட்டத்தில் அங்கிருந்து வெளி வந்து 1979ல் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடும்பம் அமைப்பை உருவாக்குகிறார், அதன் மூலம் குறைந்த இடுபொருட்கள் கொண்டு விவசாயம் செய்யும் முறையை (Low external input and sustainable agriculture – LEISA) பல்வேறு தொண்டு அமைப்புகளின் வலையமைப்பு மூலம் பரப்புகிறார். பின் 1990ல் மானாவாரி விவசாயத்திற்கான மையமாக (Ecological Centre for Rain – Fed Cultivation) புதுக்கோட்டை அருகில் கொளுஞ்சிப் பண்ணையை உருவாக்கி அங்கு விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வியல், சமூக நீதி, முறைசாராக் கல்வி மூலம் நல்லறிவு எனப் பலவற்றையும் அந்த வட்டார மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். 1995ல் இந்திய அளவில் உருவாக்கப்பட்ட ARISE – Agricultural Renewal in India for Sustainable Environment அமைப்பின் தமிழகப் பொறுப்பாளராக இயங்கினார்.
1995ல் மருத்துவர் ஜீவா அவர்கள் நடத்திய சோலைசந்திப்பு என்கிற இயக்கியவாதிகளுக்கான சூழல் பட்டறையில் கலந்து கொண்ட போது இனி நேரடியாக விவசாயிகள் மத்தியில் இயங்குவது என்ற முடிவெடுத்து ஈரோட்டைத் தளமாக வைத்து இயங்கினார்.
அவருடன் இணைந்து இயங்க சமூக அறிவியல், சமூக அரசியல். சூழல் அரசியல் புரிதல் கொண்ட இளைய கூட்டம் கைகோர்த்துக் கொண்டது. அப்போது அங்கு தினமணியில் பணிபுரிந்த பாண்டியராஜன் பத்திரிக்கைகளில் மூலம் புதிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
பின் நடந்தது பலரும் அறிந்த வரலாறு. விவசாயிகள் அவரை தாங்கிக் கொண்டனர். 2000ல் நடந்த முதல் இயற்கை விவசாய பிரச்சார நடைபயணத்திற்கு நாங்கள்{ முன்நின்று நடத்தியவர்கள்- 22 நாட்கள் பயணம்) செய்த மொத்த செலவே 2,300 தான். அந்தளவு விவசாயிகள் தாங்கிக் கொண்டனர் அவரை, அவரது முயற்சியை.
விவசாயிகளுக்கு நவீன விவசாயம் என்ற பெயரில், அறிவியல் என்ற பெயரில் வணிக நிறுவனங்களுக்கு வாழ்க்கை அடிமைபடுவதை, படுத்துவதை புரிய வைக்க உண்மையான அறிவியலை புரிய வைப்பதே வழி, அதை அவர்களுக்குப் புரியும் மொழியில் எடுத்துக் கூறுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பாஃலோ பியரி யின் கல்வி, விடுதலைக்கான முறையை முழுமையாகக் கடைபிடித்தவராக இருந்தார். அவரது வெற்றிக்கு இது மிக முக்கியமான காரணி என்பது என் கருத்து.
அவர் விவசாயிகளுக்காக, இயற்கை விவசாயத்திற்காக உழைத்தவர் என்பது மேம்போக்காக தெரியும் பிம்பம். உண்மையின் அவர் தமிழகத்தின் ஒவ்வொரு மனிதனின் ‘வாழ்தலுக்காக’ இயங்கியவராகவே எனக்குத் தெரிகிறார்
15,000 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க இந்த சமூகம் மீண்டும் அடிமைத் தழையிலிருந்து எழுந்து வர எந்தெந்தத் தளங்களில் சிறப்பு பெற வேண்டுமோ அத்துணை தளங்களிலும் ஆழமான புரிதலுடன் அதை இயற்கை விவசாயத்துடனும், இயற்கை வாழ்வியலுடனும் இணைத்தவர்.
ஆரோக்கியமான உடல், மகிழ்வான வாழ்வு, வாழ்வை உயர்த்துவதற்கான உண்மையான கல்வி, நோயில்லா வாழ்வு இவற்றை அடைவதற்கு எவையெல்லாம் சரியானவைகள் என்று அறிந்துணர்ந்தவைகளை தாமே கடைபிடித்துப் பார்த்த பின் பிறருக்கு தன் அனுபவங்களாக வழங்கிய முறை மிகப் புதிய முறை.
சரியான உணவு முறைகள், ஆரோக்கியமான வாழ்வு முறைகள், நோயுற்றால் மூலிகை மருத்துவம், இயற்கை வைத்தியம், சமைக்காத உணவுகள், யோகாசன பயிற்சிகள் என பலவும் அவர் அனுபவங்கள் பெற்ற பின் கூறியவை. இதற்காகவே அவர் மூலிகை வைத்தியம் கற்றார், மருந்தில்லா வைத்தியம் கற்றார்..ஆசனங்கள் கற்றார், பல்வகை இயற்கை விவசாய, இரசாயனமில்லா விவசய முறைகளில் பயிற்சி பெற்றார். இப்படி பலவும் கற்றறிந்த பின்னரே உரைத்தார்.
மக்களுக்குப் பகிரத்தக்கவைகளை தேடித்தேடி கற்றார்.
ஆனால் தான் தான் கற்றதையோ, தன் அறிவு விசாலத்தையோ ஆழத்தையோ எவரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. அப்படிச் செய்தால் பிறர் தான் சொல்வதை அப்படியேக் கேட்டுக் கொள்வார்களே ஒழிய சுயமாக தங்களுடைய அறிவைப் பயன்படுத்த மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய அறிவைப் பயன்படுத்த வேண்டுமாயின் தான் அவர்களை விட சிறிதளவு கூட உயர்ந்தவரில்லை என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தன் சுயம் அடக்கியவர். சக மனிதன் சுயமாக இயங்கிவதே, இயங்க உதவுவதே புரட்சியின் மூலம் என இயங்கியவர்.
உலகைப் புரட்டிப் போட்ட புரட்சிக்காரர்களில் இவர் போல தன் சுயம் மறைத்து வாழ்ந்தவர்கள் எவருமில்லை எனலாம்.
Source:Vanagam, wikipedia
Leave A Comment
You must be logged in to post a comment.