விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான, பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கக்கூடிய பண்ணைய முறை, ஒருங்கிணைந்த பண்ணையம்தான். பயிர் சாகுபடியோடு ஆடு, மாடு, மீன்கள் என வளர்க்கும்போது… ஒன்றில் வருமானம் குறைந்தாலும் மற்றொன்று ஈடுகட்டிவிடும். அதோடு, ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு உணவு என்கிற அடிப்படையில் பல்லுயிர்ச்சூழலும் உருவாகும். இதை உணர்ந்துதான் பலரும் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து நிறைவான லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார்.
திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள வரம்பியம் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை அமைத்துள்ளார், ரவிக்குமார். ஒரு பகல் பொழுதில் ரவிக்குமாரின் பண்ணைக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தார்.
“எங்க தாத்தா விவசாயி. அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஆசிரியர்கள். நான் ‘டிப்ளோமா பிரின்ட்டிங் டெக்னாலஜி’ படிச்சிட்டு, தனியார் நிறுவனத்துல சில வருஷங்கள் வேலை பார்த்தேன். அப்புறம், சொந்தமா அச்சகம் ஆரம்பிச்சு நடத்திட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல நம்மாழ்வார் ஐயா மேல ஈர்ப்பு வந்தது. அதன்பிறகு இயற்கை விவசாயம் செய்யலாம்னு முடிவு செஞ்சேன். 2005-ம் வருஷம், எங்களோட பூர்வீக நிலம் அஞ்சு ஏக்கர்ல விவசாயத்தை ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துல பக்கத்திலேயே அஞ்சு ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்தது. அதையும் வாங்கிட்டேன். இப்போ மொத்தம் 10 ஏக்கர் நிலம் இருக்கு. களிமண் பூமி. ஆரம்பத்துல இருந்தே பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்தலை. ரசாயன உரங்களை மட்டும் பயன்படுத்திட்டு இருந்தேன். அப்புறம் அதையும் கொஞ்சம் கொஞ்சமாக் குறைச்சு 2012-ம் வருஷத்துல இருந்து முழு இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன்” என்று முன்னுரை கொடுத்த ரவிக்குமார், தொடர்ந்தார்.
“இங்க போர்வெல் பாசனம் கிடையாது. ஆற்றுத் தண்ணீரையும் மழையையும் நம்பித்தான் வெள்ளாமை செஞ்சாகணும். இது கடைமடைப் பகுதிங்கறதால சில நேரங்கள்ல தண்ணி கிடைக்காம போயிடும். சில சமயங்கள்ல வெள்ளமும் வந்துடும். இந்த இரண்டு பிரச்னையையுமே தீர்க்கிற மாதிரி ஒரு ஏக்கர்ல குளமும் அரை ஏக்கர்ல ஒரு குளமும் எடுத்தேன். ஒரு ஏக்கர் குளத்தோட ஆழம் 18 அடி. அரை ஏக்கர் குளத்தோட ஆழம் 6 அடி. என் நிலத்துக்குள்ள பெய்ற மழை தண்ணி முழுசும் இந்த ரெண்டு குளத்துக்கும் வந்துடும். ஆத்துல தண்ணி வரும்போதும் குளங்களுக்குள்ள விட்டுடுவேன். குளங்களைச் சுத்தி வேம்பு, சூபாபுல்னு நிறைய மரங்கள் இருக்கு. இதனால குளத்துக்கு நிழல் கிடைக்கிறதோடு தண்ணி ஆவியாகிறதும் குறையுது. வருஷம் முழுசும் குளத்துல தண்ணி இருக்குது. அதைச் சிக்கனமா பயன்படுத்திட்டு இருக்கேன்.
5 ஏக்கர்ல ஒரு போகம் பாரம்பர்ய நெல்லை சாகுபடி செய்றேன். 20 நாளுக்கு ஒரு தடவை காய்ச்சலும் பாய்ச்சலுமாதான் தண்ணி கொடுக்கிறேன். மழைத்தூவான் (ரெயின்கன்) அமைச்சு அரை ஏக்கர்ல பசுந்தீவனம் போட்டிருக்கேன். பட்டாம்பூச்சி பாசனக் கருவி(ஸ்பிரிங்ளர்) அமைச்சு அரை ஏக்கர்ல கீரை போட்டிருக்கேன். ஒர் ஏக்கர்ல சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு காய்கறி சாகுபடி செஞ்சிட்டு இருக்கேன். இந்த மாதிரி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திறதால தண்ணீர் அதிகமா செலவாகுறதில்லை.
எல்லாப் பயிருக்குமே பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், செறிவூட்டப்பட்ட எருன்னு இயற்கை இடுபொருள்களைத்தான் பயன்படுத்துறேன். பூச்சிகளைத் தடுக்க மூலிகைப் பூச்சிவிரட்டி பயன்படுத்துறேன். தோட்டத்துல பசுந்தீவனம் நிறைய இருக்கு. அஞ்சு ஏக்கர்ல நெல் போடுறதால வைக்கோலுக்கும் பஞ்சம் இல்லை. இருபது மாடுகளுக்குத் தேவையான தீவனம் இங்கேயே கிடைச்சுடுது” என்ற ரவிக்குமார், நமக்குத் தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.
குளத்தில் மீன் வளர்ப்பு
“ஒன்றரை ஏக்கர் குளத்திலேயும் மீன் வளர்க்கிறேன். கட்லா, மிர்கால், ரோகு எல்லாம் கலந்து 3,000 குஞ்சுகளைக் குளத்துல விட்டுடுவேன். தவிடு, கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, கம்பு, கேழ்வரகு, சோளம் எல்லாத்தையும் அரைச்சு மாவாக்கி, தீவனமாகக் கொடுக்கிறேன். ஒன்பது மாசத்துல மீன்கள் நல்லா வளர்ந்துடும். அதுக்கு மேல தேவைக்கேத்த அளவுல பிடிச்சு விற்பனை செய்வேன். பிடிக்க ஆரம்பிச்சதில இருந்து மூணு மாசத்துக்குள்ள முழுசும் விற்பனையாகிடும். அப்புறம் திரும்பக் குஞ்சுகளை விட்டு வளர்க்க ஆரம்பிச்சிடுவேன்.
20 கலப்பின மாடுகள்
சிந்தி, ஜெர்சி கலப்பின மாடுகளும் உம்பளச்சேரி கலப்பின மாடுகளும் சேர்த்து மொத்தம் 20 மாடுகள் இருக்கு. ஒவ்வொரு மாட்டுக்கும் தினமும் தலா அரைக்கிலோ கடலைப் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு, பருத்திக்கொட்டைப் பிண்ணாக்கு,
100 கிராம் சிறுதானிய மாவு, ரெண்டு கிலோ தவிடுனு அடர்தீவனம் கொடுக்கிறேன். கன்னுக்குட்டிகளுக்கு வளர்ச்சியைப் பொறுத்து அளவைக் குறைச்சுக்குவேன். பசுந்தீவனமா கோ-4, வேலிமசால், எருமைப் புல், கிளரிசீடியா, சூபாபுல், அகத்தி, தோட்டத்துல இருக்கிற புல் பூண்டுகள் எல்லாம் கலந்து ஒரு மாட்டுக்கு தினமும் அஞ்சு கிலோ அளவுல கொடுக்கிறேன்.
40 நாட்டு ஆடுகள்
கன்னி, பள்ளைனு நாட்டு ரக ஆடுகளும் இருக்கு. எப்பவும் இங்க 40 தாய் ஆடுகள் இருக்கிற மாதிரி பார்த்துக்குவேன். ஆடு, எட்டு மாசத்துக்கு ஒரு தடவை குட்டி போடும். ஒவ்வொரு ஈத்துக்கும் ரெண்டு குட்டி கிடைக்கும். குட்டிகளை ஒரு வருஷம் வரை வளர்த்து விற்பனை செஞ்சுடுவேன். ஒரு ஆட்டுக்குத் தினமும் 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு, 50 கிராம் சிறுதானிய மாவு கலந்து அடர்தீவனம் கொடுக்கிறேன். ஆடுகளுக்கும் இங்க விளையுற பசுந்தீவனமே சரியா இருக்குது” என்ற ரவிக்குமார், காய்கறி வயலுக்கு அழைத்துச் சென்றார்.
ஒரு ஏக்கரில் காய்கறி, அரை ஏக்கரில் கீரை
“ஒரு ஏக்கர்ல வெண்டை, கத்திரி, பாகல், புடலை, பீர்க்கன், அவரைக்காய்னு பல வகையான காய்கறிகள் இருக்கு. மாசத்துக்கு ஒரு தடவை ஒவ்வொரு செடியைச் சுத்தியும் 200 கிராம் செறிவூட்டப்பட்ட எரு கொடுப்பேன். 10 நாள்களுக்கு ஒரு தடவை 30 லிட்டர் தண்ணீர்ல மூணு லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிச்சிடுவேன். எல்லா காய்கள்ல இருந்தும் தினமும் 30 கிலோ அளவுக்குக் குறையாம விற்பனை செய்றேன். மழைக்காலம், வெயில் காலத்துல காய்கறி சாகுபடியை நிறுத்திடுவேன். அந்த வகையில வருஷத்துல எட்டு மாசங்கள் காய்கறிகள் மூலமா வருமானம் கிடைச்சுடும்.
முளைக்கீரை, பொன்னாங்கன்னி, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, சிறுகீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, பசலிக்கீரைனு கலந்து அரை ஏக்கர் நிலத்துல சாகுபடி செய்றேன்.
விதைச்ச நாலாம் நாள் தலா 100 கிராம் ட்ரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனஸ், 500 மில்லி தயிர் மூன்றையும் 25 லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிச்சிடுவேன். பயிர் சுணக்கமா இருந்தா பஞ்சகவ்யா தெளிப்பேன். இந்த பராமரிப்பிலேயே நல்லா விளைஞ்சு வந்துடும்” என்ற ரவிக்குமார் நிறைவாக,
“திருத்துறைப்பூண்டியில இயற்கை அங்காடி நடத்திக்கிட்டு இருக்கேன். மீன், காய்கறி, கீரை, அரிசினு என்னோட விளைபொருள்கள் எல்லாத்தையும் நேரடியாகவே விற்பனை செய்றேன். அதனால, கூடுதலாக லாபம் கிடைக்குது. இந்தப் பத்து ஏக்கர்ல வருஷத்துக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் எடுத்திட்டு இருக்கேன்” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, ரவிக்குமார், செல்போன்: 99432 89053.
ரவிக்குமார் சொல்லும் வருமானக் கணக்கு
தன்னுடைய ஒருங்கிணைந்த பண்ணையில் மீன், ஆடு, மாடு, காய்கறிகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை இங்கே பட்டியலிட்டுள்ளார் ரவிக்குமார், “ஐந்து ஏக்கர் நிலத்துல மொத்தம் 100 மூட்டை நெல் (60 கிலோ) மகசூலாகுது. அதுல 60 மூட்டை நெல்லை அரைச்சு 2,400 கிலோ கைகுத்தல் அரிசி உற்பத்தி செய்றேன். அதை கிலோ 65 ரூபாய்னு விற்பனை செய்றதுல 1,56,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மீதி 40 மூட்டை நெல்லை அவலா மாத்தினா 1,400 கிலோ கிடைக்கும். அதை, கிலோ 80 ரூபாய்னு விற்பனை செய்றதுல 1,12,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. எல்லாம் சேர்த்து மொத்தம் 2,68,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல விதைப்பு, பராமரிப்பு, அரிசியா அரைக்கிறது, போக்குவரத்துனு எல்லா செலவும் போக, 1,38,000 ரூபாய் லாபமா நிக்கும்.
மீன்ல மொத்தமா 2 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். உயிர் மீனா நேரடியாவே விற்பனை செய்றதால கிலோ 160 ரூபாய்னு கொடுக்கிறேன். மொத்தமா 3,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல தீவனம், பிடிக்கிறதுக்கான கூலி, போக்குவரத்துனு எல்லா செலவும் போக, 1,20,000 ரூபாய் லாபமா நிக்கும்.
20 மாடுகள்ல எப்பவுமே 10 மாடுகள் கறவையில் இருந்துட்டே இருக்கும். அதனால வருஷம் முழுக்கப் பால் கிடைக்குது. தினமும் 60 லிட்டர் பாலை ஒரு லிட்டர் 40 ரூபாய்னு விற்பனை செய்றேன். அதுமூலமா தினமும் 2,400 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவும் போகத் தினமும் 1,000 ரூபாய் லாபமா கையில கிடைச்சுடும். அந்த வகையில வருஷத்துக்கு 3,65,000 ரூபாய் பால் மூலமா லாபம் கிடைச்சுடுது.
15 கிலோ உயிர் எடையில் ஓர் ஆடு 3,500 ரூபாய் விலையில விற்பனை செய்றேன். வருஷத்துக்கு 60 ஆடுகள் விற்பனை செய்றதுல 2,10,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக, வருஷத்துக்கு 1,50,000 ரூபாய் லாபம் கிடைக்குது.
தினமும் 30 கிலோ காய்கறிகளை கிலோ 40 ரூபாய்னு விற்பனை செய்றேன். அந்த வகையில் தினமும் 1,200 ரூபாய் வருமானம் கிடைக்கும். 8 மாசத்துல 2,88,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லாச் செலவும் போக 1,60,000 ரூபாய் லாபமா நிக்கும்.
தினமும் ஒரு கட்டு பத்து ரூபாய்னு 100 கட்டு கீரை விற்பனை செய்றேன். அதுமூலமா தினமும் 1,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. வருஷத்துக்கு ஏழு மாசம் கீரை மூலமா வருமானம் கிடைக்கும். அந்த வகையில் 2,10,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவும் போக, 1,50,000 ரூபாய் லாபமா நிக்கும்.”
செறிவூட்டப்பட்ட எரு
“500 கிலோ மாட்டு எரு, 50 கிலோ ஆட்டு எரு, தலா 5 கிலோ பாஸ்போ பாக்டீரியா அசோஸ்பைரில்லம், தலா 5 லிட்டர் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று நாள்கள் வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட எரு தயாராகிவிடும்.
இதைப் பயிருக்குக் கொடுத்த சில நாள்களிலேயே பயிரில் நல்ல மாற்றத்தைக் கண முடியும்” என்கிறார், ரவிக்குமார்.
Source: Pasumai Vikatan
Leave A Comment
You must be logged in to post a comment.