Protecting crops from birds using technology

விவசாயத்தில் பூச்சிகளின் தாக்குதலால் ஏற்படும் சேதத்தைவிடப் பறவைகளால் ஏற்படும் சேதம் மிக அதிகம். குறிப்பாக, மானாவாரி விவசாயத்தில் பறவைகளால் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்துவருகிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில் எளிய தொழில்நுட்பம் மூலமாகப் பறவைகளை விரட்டி வருகிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மானாவாரி விவசாயி காமராஜா. தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலச்செக்காரக்குடி கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார் காமராஜா. ஓர் உச்சி வெயில் நேரத்தில் காமராஜாவின் தோட்டத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தோம்.

“எங்க பகுதி வானம் பார்த்த பூமி. மழை பெய்யாட்டி விவசாயம் இருக்காது. கம்பு, உளுந்து, பாசி, மக்காச்சோளம், இருங்குச்சோளம்னு சாகுபடி செய்றோம். எங்களுக்கு 15 ஏக்கர் நிலம் இருக்கு. முழுக்கக் கம்பு போட்டுருக்கோம். மழை கிடைக்கிறதே கஷ்டம். அப்படியே மழை கிடைச்சு பயிர் விளைஞ்சு வந்தா குருவி, மயில்னு படையெடுத்து வந்து கொத்த ஆரம்பிச்சிடும். பறவைகள்தானே சாப்பிடட்டும்னு விட்டா, அது சாப்பிடறதைவிடச் சேதப்படுத்துறதுதான் அதிகமா இருக்கும். கொத்துறதால தானியங்கள்லாம் மண்ல விழுந்து வீணாகிடுது. கம்பு போட்டா ‘படைக்குருவி’னு சொல்ற குருவிகள் கூட்டம் கூட்டமா வந்துடும். இதப் பத்தி ஒரு பேராசிரியர்கிட்ட பேசிட்டுருந்தப்போ, அவர்தான் ‘சி.டி’, ‘பழைய ஆடியோ கேசட் டேப்’ ரெண்டையும் கட்டிவிடுற யோசனையைச் சொன்னார். உடனே தோட்டத்துல ஒரு மூலையில், சி.டி-க்களைக் கட்டிவிட்டேன். அந்தப் பகுதியில குருவிகள் வரவேயில்லை. அதனால, தோட்டம் முழுக்கச் சி.டி-க்களைக் கட்டி விட்டுட்டேன்” என்ற காமராஜா, தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று காட்டியபடியே பேசினார்.

“கம்பு, சோளம்னு எந்தப் பயிரா இருந்தாலும் சரி, கதிர் பிடிக்கிற நேரத்துல ஏக்கருக்குப் பத்து இடங்கள்ல இந்த மாதிரி கட்டிவிட்டுடுவேன். ஆடியோ கேசட் டேப்பை ஒரு மீட்டர் நீளத்துக்கு ஏழு துண்டுகளா வெட்டி, அதுல 16 சி.டி-க்களைக் கோர்த்துக் கட்டிவிட்டுருக்கேன். இதுல எட்டு சி.டி-க்கள்ல ஒளி பிரதிபலிக்கும் பக்கங்களை வலப்புறமாவும் மீதி எட்டு சி.டி-க்கள்ல இடப்புறமாவும் இருக்குற மாதிரி கட்டிவிட்டுருக்கேன். இந்தச் சி.டி-க்கள்ல சூரிய ஒளிபட்டு மின்னுறப்போ குருவிகள் பக்கத்துலேயே வர்றதில்லை. அதோட, காத்து வீசும்போது இந்த ஆடியோ டேப்ல இருந்து ‘விஷ்’னு சத்தம் வருது. இந்தச் சத்தமும் குருவிகளை விரட்டிடுது. ஆடியோ கேசட் டேப்பைக் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டி விட்டா மயில்களும் வர்றதில்லை” என்ற காமாராஜா நிறைவாக,

“இப்போ, சி.டி, ஆடியோ கேசட்டெல்லாம் பழைய பொருள்கள் விற்பனை செய்ற கடைகள்ல குறைவான விலைக்குக் கிடைக்குது. அதனால, இதுக்குப் பெரிய செலவு இருக்காது. ரொம்பச் சுலபமான வேலைதான். இதைக் கடைப்பிடிச்சா கண்டிப்பா கணிசமான அளவு மகசூல் அதிகரிக்கும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பிச்ச பிறகு, எனக்கு வழக்கமா கிடைக்கிற மகசூலைவிட ஏக்கருக்கு 200 கிலோ அளவுக்குக் கூடுதலா மகசூல் கிடைக்குது” என்றார் சந்தோஷமாக.

தொடர்புக்கு,
காமராஜா,
செல்போன்; 97867 28785

 

Source: Pasumai Vikatan

தொழில்நுட்பம்இ.கார்த்திகேயன் – படங்கள்: ஏ.சிதம்பரம்