வானகம் (vanagam)
பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுபாதுகாப்பிற்கான
நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம்
”வானகம்”, (vanagam) உலகளவில் உணவிற்கு உத்தரவாதம், ஆரோக்கியமான சுற்றுச்சூழல், உயிர்ச் சூழலுக்கு இசைவான உணவு உற்பத்தி ஆகிய அடிப்படைத் தேவைகளை அடைவதை இலக்காகக் கொண்டு செயல்படுகின்ற ஒரு சமூகப்பணி நிறுவனம்.
வானகத்தின் தோற்றமும் அமைவிடமும்:
அறக்கட்டளை சட்டத்தின் கீழ் “வானகம்” 02.6.2009 அன்று திரு.கோ.நம்மாழ்வார்அவர்களால் தொடங்கப்பட்டது. “வானகம்” கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுருமான்பட்டியில் அமைந்துள்ளது.
கடவூர் மலைகளால் சூழப்பட்டிருக்கும் போதும் இந்தியாவில் காணப்படும் மற்ற வானவாரி நிலங்களுக்கு ஏற்பவே வறட்சியாகவும், வறுமைக்கு நிலைக்களமாகவும் விளங்குகிறது.
கடவூர் மலைகளில் வளர்ந்த பசுமை மரக்கூட்டங்கள் கிடையாது. மாறாக, முட்புதர்கள் மட்டுமே காணப்படுகின்றன. கடவூர் பகுதி ஆண்டிற்கு 40 முதல் 50 நாட்கள் வரை மட்டுமே மழை பெய்யக் கூடிய மழை மறைவு மண்டலம்.
நாற்பது ஆண்டுகளாக கலப்பை காணாத பண்ணை நிலம், கட்டுப்பாடு இல்லாத மேய்ச்சலால் மண் அரிப்பிற்கு ஆளாகி கற்களாகவும் பாறைகளாகவும் இருந்தது.
ஆங்காங்கே மின்சார வசதியுடன் ஆழ்குழாய்க் கிணறுகள் வைத்துள்ள உழவர்கள் ஆலைக்கு மூலப்பொருளாகத் தேவைப்படும் கரும்பும் மரவள்ளியும் பயிர் செய்கிறார்கள். இப்பயிர்களுக்கு இடப்படும் இரசாயன உரங்களால் நிலத்தடி நீர் குடிக்க தகுதியற்றதாக மாறிவருகிறது.
சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சத்துணவு தானியங்கள் பயிர் செய்பவர்கள்கூட ரேசன் கடை அரிசியையும், பூச்சிக்கொல்லி நஞ்சு கலந்த காய்கறிகளையும் உண்டு வறுமையிலும் நோயிலும் வாடுகிறார்கள்.
இத்தகைய சூழலில் அடுத்து வரும் சந்ததியினருக்கு நல்லதொரு வாழ்வதற்கேற்ற பூமியை உருவாக்கிட ஏற்ற பண்ணை முறையை நடைமுறைப்படுத்திக்காட்ட “வானகம்”முயற்சிக்கிறது.
வானகத்தின் செயல்பாடுகள்:
அ. வானகம் வளாகத்தில் செயல்பாடுகள்:
- வளம் இழந்த நிலங்களை விளைநிலங்களாக மீட்டெடுத்தல்.
- கழிவு மறுசுழற்சியும், காடு வளர்ப்பும் மக்கள் பங்களிப்புடன் செய்வது. வீட்டைச் சுற்றி, சாகுபடி நிலங்களில் மற்றும் புறம்போக்கு நிலங்களில் இப்பணிகளை மேற்கொள்வது.
- நலவாழ்வு மையம், யோகா மையத்தை நிறுவுவது.
- பாரம்பரிய பயிர்விதைகளையும் கால்நடைகளையும் பராமரிப்பது.
- ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சிப் பணி குறித்து இளைஞர்கள், பெண்கள், உழவர்களுக்குப் பயிற்சியளிப்பது.
- நமது பாரம்பரிய கலாச்சாரத்திற்கு இசைவான, வாழ்க்கைமுறை மலர்ச்சிக்கான கல்வி நடுவங்களை உருவாக்குவது.
- இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்காக ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்வது.
- நாட்டில் திடக்கழிவு மேளாண்மையையும், நஞ்சில்லா உணவு உற்பத்தியையும் இணைப்பதன் மூலம் உணவு உற்பத்தியையும் உடல் நலத்தையும் ஒருசேர மேம்படுத்துவது.
ஆ. இணைந்த செயல்பாடுகள்:
- மேலே குறிப்பிட்ட பணிகளை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்வதற்காக அரசுசாரா நிறுவனங்களுடனும் ஆன்மீக நிறுவனங்களுடனும் வானகம் இணைந்து செயல்படுகிறது.
- பத்திரிகைகளுடன் இணைந்து வானகம் இயற்கைவழி வேளாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கருத்துக்களை மக்களுக்கு கொண்டுசெல்கிறது.
- பங்கேற்கும் உறுதித் திட்டம் (Participatory Guarantee System) அடிப்படையில் இயற்கை வேளாண் பண்ணைகளுக்கு சான்று பெற்றுத்தரும் பொறுப்பை ‘அனைத்திந்திய இயற்கை பண்ணைய சங்கம்” வானகத்திற்கு வழங்கியுள்ளது.
- வானகம் இதர சேவை அமைப்புகளுடனும் மருத்துவர்களுடனும் இணைந்து இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது.
- மரபணுப் பொறியியலுக்கு எதிரான செயல்பாட்டிற்கான தென்மாநிலக் கூட்டமைப்பில் வானகம்ஒரு முக்கியக் கூட்டாளியாகும்.
- வானகம் அனைத்திந்திய நவதானிய வலைப் பணியில் முக்கியப் பங்காளியாக விளங்குகிறது.
- பாரம்பரிய சிகிச்சை முறைகளைப் பரப்பும் பணியில் வானகம் மரபு மருத்துவர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
- உயிர்ச்சூழல் வேளாண்மை, விளைபொருட்களை சந்தைப்படுத்தி மதிப்புக் கூட்டல் போன்றவை குறித்த கல்வியை மக்களுக்கு கொண்டு செல்வதற்காக வானகம் மாவட்ட, மாநில அளவில் மற்றவர்களுடன் கை கோர்த்து நிற்கிறது.
வானகத்தின்செயல்பாடுகளால் நிகழ்ந்துள்ள மாற்றங்கள்:
- வானகம் அளித்துவரும் நீடித்த நிலைத்த வேளாண் பயிற்சியில் இதுவரை பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் பங்கெடுத்துள்ளனர்.
- நீடித்த நிலைத்த வேளாண் பயிற்சியில் பங்கெடுத்த உழவர்கள் இரசாயனங்களின் பிடியில் இருந்து வெளிவந்துள்ளனர்.
- வானகப் பயிற்சியில் கற்றவற்றை தங்கள் பண்ணைகளில் நடைமுறைப்படுத்தியதன் மூலம் உழவர்கள் கடனில் இருந்து மீண்டு மனநிறைவு பெற்றுள்ளனர்.
- வானகத்தில் பயிற்சி பெற்ற உழவர்கள் பல்லுயிர்ச் சூழலுக்கு இசைவான வேளாண்மையை மேற்கொண்டதன் மூலம் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு துணைபுரிந்துள்ளனர்.
- வானகத்தில் பயிற்சி பெற்ற உழவர்கள் பலபயிர் சாகுபடியை மேற்கொண்டதன் மூலம் தங்களது முழு உணவு தேவையையும் பூர்த்தி செய்து கொண்டு, நஞ்சில்லா சத்தான உணவை உண்டு வருகின்றனர்.
- வானகத்தின் இயற்கை வாழ்வியல் பகிர்வுகளில் கலந்து கொண்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், நகர்ப்புற மக்கள் இயற்கை வாழ்வியலுக்கு திரும்பியுள்ளனர்.
- பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த பகிர்வுகளில் பங்கெடுத்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உடல்நலம் பற்றிய அடிப்படை புரிதலை பெற்றதோடு, தங்களது நோய்களில் இருந்தும் விடுபட்டு நலவாழ்வை மேற்கொண்டு வருகின்றனர்.
- பாரம்பரிய சிகிச்சை முறைகள் மூலம் சிகிச்சை பெற்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நோய்களின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.
- பயிற்சிகள் மூலம் வானகம் அளித்த புரிதல் மற்றும் தூண்டுதலால் ஐநூறுக்கும் மேற்பட்ட நகர்ப்புற மக்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பி வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர்.
- வானகத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் நஞ்சில்லா உணவின் அவசியம் குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
- ஆழிப் பேரலையால் (Tsunami) பாதிக்கப்பட்ட நிலங்களை புனரமைப்பதில் வானக நண்பர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கொண்டு, தற்போது வானகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், அம்மக்களின் பாதிக்கப்பட்ட நிலங்களை புனரமைப்பதற்காகவும் செயலாற்றி வருகிறது.
Source:Vanagam
Leave A Comment
You must be logged in to post a comment.